தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை துறை சார்பில், அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கான நவீன லேப்ராஸ்கோபிக் சிறப்பு திறன் பயிற்சி முகாம் பேருந்துக்குள் அமைக்கப்பட்ட பிரத்யேக மருத்துவக் கருவிகளுடன் 2 நாட்கள் நடைபெற்றது.
வயிற்றைக் கிழிக்காமல் சிறிய துளை மூலம் கருவிகளை செலுத்தி அறுவை சிகிச்சை செய்வது, தையலுக்குப் பதிலாக நவீன ஸ்டேப்ளர் பயன்படுத்துவது உள்ளிட்ட அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. விலங்குகளின் உடலுறுப்புகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நுட்பங்களை மருத்துவர்கள் பயிற்சி பெற்றனர்.
இதில் எம்.எஸ். மருத்துவம் முடித்த 48 டாக்டர்கள் பயிற்சி பெற்றனர். ஒரே நேரத்தில் 40 முதல் 50 மருத்துவர்கள் வரை பயிற்சி பெறும் வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கணேஷ் கூறுகையில், லேப்ராஸ்கோபிக் முறையால் அறுவை சிகிச்சை நேரம், மயக்க மருந்து நிபுணரின் நேரம், ரத்த இழப்பு ஆகியவை குறையும். நோயாளிகள் குறைந்த வலியுடன் விரைவில் வீடு திரும்ப முடியும் என்றார்.
மதுரையைத் தொடர்ந்து திருச்சி உள்ளிட்ட பிற மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்தப் பயிற்சி பேருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சிகளில் அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார், இந்திய அறுவை சிகிச்சை சங்க தேசிய தலைவர் மருதுபாண்டியன், தமிழ்நாடு தலைவர் ரமேஷ், முன்னாள் டீன் ரத்தினவேல், வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
முன்னாள் இராணுவ வீரரின் உடல் மருத்துவக் கல்விக்காக தானம் – சிவகங்கை மருத்துவக் கல்லூரி பாராட்டு