July 11, 2026

அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பேரூராட்சியில் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள், திட்டத்தை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசின் கனிமவளத்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை கருணாநிதி, புதுவயல் பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் மற்றும் உதவி பொறியாளர் சரவணன் ஆகியோருடன் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், திட்டத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பையும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது.

பின்னர் கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசுத் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே ஆய்வு செய்வது வழக்கமான நிர்வாக நடைமுறையாக உள்ள நிலையில், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத அமைச்சரின் தந்தை அரசு அதிகாரிகளுடன் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிகார வரம்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.”அரசுப் பொறுப்பு இல்லாத ஒருவர் அதிகாரிகளுடன் அரசு திட்டப் பணிகளை எந்த அடிப்படையில் ஆய்வு செய்தார்?”, “இது அதிகாரப்பூர்வ ஆய்வா, அல்லது தனிப்பட்ட களப்பார்வையா?” என்ற கேள்விகள் தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அல்லது அமைச்சரின் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Spread the love