June 4, 2026

சிவகங்கை – நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழாவில் சர்ச்சை – பாரம்பரிய வாரிசுகள் நீதிக்காக போராட்டம்!

300 ஆண்டுகால பாரம்பரிய உரிமை பறிப்பு? – கண்ணீருடன் நீதிக்காக காத்திருக்கும் குடும்பத்தினர்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் தங்களது பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறி மேனாட்டான் வகையறாவைச் சேர்ந்த வாரிசுதாரர்கள் தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி மாதத்தில் சேங்கை விட்டு திருவிழாவும், சித்திரை மாதத்தில் ஸ்ரீ ஐயனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், மேனாட்டான் வகையறாவைச் சேர்ந்த அழகர்சாமி, நாராயணன், முத்துக்குமார் உள்ளிட்ட வாரிசுதாரர்கள், தங்களது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட பழமையான செப்புப்பட்டயங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர், அறநிலையத்துறை இயக்குநர், சிவகங்கை சமஸ்தானம், மாவட்ட ஆட்சியர், காளையார்கோவில் தாசில்தார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் மேளம் கொட்டுதல், காலாஞ்சி வாங்குதல், தேருக்கு தைலக் கொட்டீஸ் கொண்டு செல்லுதல், தேருக்கு கிடாய் வெட்டுதல், கொடிமரத்திற்கு கயிறு திரித்தல், அதற்கான 11 சாதம் பெறுதல், கட்டளை காசு மற்றும் அரிசி வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய பணிகளை தொடர்ந்து செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நிகழ்வுகளில் தங்களை பங்கேற்க அனுமதிக்காமல் புறக்கணித்து வருவதாகவும், குடும்பத்தினரை சமூக ரீதியாக ஒதுக்கி வைத்து திருவிழா நடத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஊர் முன் விழுந்து கும்பிட்டு வந்தால்தான் திருவிழாவில் சேர்த்துக் கொள்ளப்படும் என கோவில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாரிசுதாரர்கள், “நாங்கள் ஊருடன் இணைந்து தேர் இழுக்கவும், திருவிழாவில் பங்கேற்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களை திட்டமிட்டு ஒதுக்கி வருகின்றனர். இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பாரம்பரிய மற்றும் நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சில நிர்வாக மற்றும் அரசு அலுவலர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாக கருதுகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி எங்கள் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.இந்த விவகாரம் நாட்டரசன் கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Spread the love