October 19, 2026

ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிப்பு!விநியோகத்தை சீரமைக்காவிட்டால் ஆவினுக்கே பால் ஊற்றும் நிலை ஏற்படும் – பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 33 லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், தற்போது 22 முதல் 24 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தேவைக்கும், கொள்முதலுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், நீலம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் ஊதா நிற பால் மட்டுமே கிடைப்பதாகவும் அவர்கள் கூறினர்.
பால் கொள்முதல் குறைந்ததே தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி முதல் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் லிட்டருக்கு ரூ.44-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.53-ம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தட்டுப்பாடு தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு நேரடி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஆன்லைன் விற்பனை வாயிலாக தனியார் நிறுவனங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் பால் அனுப்பப்படுவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Spread the love