காவிரி–வைகை–கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கி, திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் மதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள நீர்வளத்துறை மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில், சங்க பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தென் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி 50 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
2021-ம் ஆண்டு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. மாயனூரில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு, அங்கிருந்து மானாமதுரை வைகை ஆறு, பின்னர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே குண்டாறு வரை மொத்தம் 262 கி.மீ. கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை சுமார் 10 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.14 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பு பட்ஜெட்டில் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த நிதியில் சுமார் 5 கி.மீ. மட்டுமே கால்வாய் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.
போராட்டத்துக்கு பின்னர் மண்டல தலைமைப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட தலைமைப் பொறியாளர், கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
“7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் இத்திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என சங்க பொதுச் செயலாளர் அர்ச்சுணன் வலியுறுத்தினார்.
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!

More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
முன்னாள் இராணுவ வீரரின் உடல் மருத்துவக் கல்விக்காக தானம் – சிவகங்கை மருத்துவக் கல்லூரி பாராட்டு