March 14, 2026

விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி உயர் அதிகாரிகள் குழுவினர் இன்று காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பவம் நடந்த நாளில் காவல் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) செல்வ சுரபி தலைமையிலான அதிகாரிகள் குழு மானாமதுரை காவல் நிலையத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை விரிவாக ஆய்வு செய்தனர். கைதி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நேரம், அவர் இருந்த சூழ்நிலை, அப்போது நடந்த நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் அதிகாரிகளால் நுணுக்கமாக பரிசோதிக்கப்பட்டன. மேலும், சிசிடிவி பதிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்தனர்.இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மானாமதுரை நகராட்சி ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆய்வின் போது காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விசாரணைக் கைதி மரணம் தொடர்பான இந்த சம்பவம் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love