
சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில், அக்டோபர் 18-ஆம் தேதி மதியம் சுள்ளான் மதன் (26) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரைக் காவல்துறையினர் 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்
சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்பவரின் மகனான மதன் என்ற சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது தந்தை சக்தி அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..
கொலை செய்யப்பட்ட சுள்ளான் மதன் மீது, 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற காளையார்கோவில் சகோதரர்கள் கொலை வழக்கு உட்பட 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் 12 இதர வழக்குகள் என மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சிவகங்கை வட்டாட்சியர் மூலம் ஓராண்டுக்கான நன்னடத்தைப் பிணைப்பத்திரம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு வழக்கில் அவரது நீதிமன்றப் பிணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பான நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் இருப்பதாகக் காவல்துறை கூறியுள்ளது.சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அக்டோபர் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மதன், அக்டோபர் 7-ஆம் தேதி நீதிமன்றப் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
அதன்பின்னர் அக்டோபர் 18-ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
6 தனிப்படைகள் அமைப்பு!
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் சிலரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 575/2026, BNS சட்டப் பிரிவுகள் 191(2), 191(3), 103(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

More Stories
காவல்அதிகாரி மீதான பிடியாணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் பட்ட பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் உடனடி கைது
விருதுநகர் காவல்துறையினரின் துரித நடவடிக்கை:செயின் பறிப்பு குற்றவாளி 1 மணி நேரத்துக்குள் கைது